| ADDED : ஏப் 15, 2024 04:37 AM
சங்கராபுரம், : 'மகளிருக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர் ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்' என முன்னாள் எம்.எல்.ஏ., பேசினார்.சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில், கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் மலையரசன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநில மகளிரணி அங்கையற்கண்ணி, ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், ஆறுமுகம், ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், நகர செயலாளர் துரை முன்னிலை வகித்தனர்.பரமனத்தம், மேலப்பட்டு, ஊராங்கனி, வரகூர், திம்மனந்தல், ராமராஜபுரம், வடசிறுவளூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஓட்டு சேகரித்த வேட்பாளர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளரை வரவேற்றனர்.அப்போது முன்னாள் எம்.எல்.ஏ., அங்கையற்கண்ணி பேசுகையில், 'முதல்வர் ஸ்டாலின் மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயணம், தகுதியுள்ள மகளிருக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.திராவிட மாடல் ஆட்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. முதல்வர் ஸ்டாலின் கைகாட்டுபவரே பிரதமர் ஆவார் என்பதால், அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து வேட்பாளர் மலையரசனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார். தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.