மேலும் செய்திகள்
கம்பு சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்
29-Aug-2024
தியாகதுருகம் : மானாவாரி கம்பு மகசூல் அதிகரித்துள்ள நிலையில் கடந்த ஆண்டை விட பாதியாக விலை குறைந்து விற்பனையாவதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முக்கிய மானாவாரி பயிராக கம்பு சாகுபடி செய்யப்படுகிறது. சிறுதானிய வகைகளில் ஒன்றான கம்பு, ஆரோக்கியம் தரும் பாரம்பரிய உணவாக மக்களால் விரும்பப்படுகிறது. குறிப்பாக இதிலிருந்து தயாரிக்கப்படும் கூழ் அனைத்து தரப்பினரும் விரும்பி குடிக்கின்றனர். இதன் காரணமாக கூழ் விற்பனை செய்யும் தள்ளு வண்டி கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மட்டுமின்றி கால்நடை மற்றும் கோழி தீவனம் தயாரிக்க சேர்க்கை பொருளாக கம்பு பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கம்பு பயிர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தென்மேற்கு பருவமழை சீராக பெய்யும் தருணங்களில் இவை அதிக மகசூலை கொடுக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக கம்பு சாகுபடியில் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு கம்பு அறுவடை தருணத்தில் மார்க்கெட் கமிட்டிகளில் 100 கிலோ எடை கொண்ட கம்பு மூட்டை ரூ. 7,000 வரை விற்பனையானது. இவ்வாண்டு கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு கம்பு விளைச்சல் அதிகரித்து கூடுதல் மகசூலை கொடுத்துள்ளது.கடந்த 10 நாட்களுக்கு முன் ஒரு மூட்டை ரூ.2,800 க்கு விற்பனையானது. தற்போது தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் ஒரு மூட்டை ரூ.3900 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இது கடந்தாண்டை ஒப்பிடும்போது ஒரு மூட்டை கம்புக்கு பாதி விலை மட்டுமே கிடைக்கிறது.கம்பு மகசூல் அதிகரித்தும் எதிர்பார்த்த விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்த கம்பு மணிகளை நன்கு உலர வைத்து அதனை மூட்டைகளாக்கி வீடுகளில் ஸ்டாக் வைத்துள்ளனர். அதிக விலை கிடைக்கும் போது மார்க்கெட் கமிட்டியில் விற்பனை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.அறுவடை பருவம் முடிந்து சில மாதங்கள் சென்றதும் கம்புக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்பதால் அப்போது விற்பனை செய்து கொள்ளலாம் என்று விவசாயிகள் பலர் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக மகசூல் அதிகரித்தும் கம்பு மூட்டைகள் மார்க்கெட் கமிட்டிக்கு வருவது குறைந்துள்ளது.
29-Aug-2024