| ADDED : ஜூன் 14, 2024 07:06 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் சிறப்பு முகாமில் 112 பேர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் நடப்பாண்டிற்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. தேர்தல் நடத்தை விதி காரணமாக 2 மாத இடைவெளிக்குப்பின் நேற்று துவங்கிய முகாமில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மாவட்ட முழுவதும் சென்றுவரவும், கை, கால் பாதிக்கப்பட்ட, காதுகேளாத மாற்றுத்திறனாளி கள், கல்வி நிலையம் மற்றும் வேலைபார்க்கும் இடங்களுக்கு அரசு பஸ்களில் இலவசமாக சென்று வர பஸ் பாஸ் வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவின் பேரில் , 15.6.2024 முதல் 31.3.2025 வரையிலான காலத்திற்குள் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவது, காலாவதியான பாஸ்களை புதுப்பிப்பது போன்ற பணிகளுக்கான சிறப்பு முகாம் துவங்கியது.கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி தலைமையில் விழுப்புரம் மண்டல அலுவலக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அதியமான், முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். 112 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று உரிய சான்றுகளின் நகல் வழங்கி உடனடியாக தங்களுக்கான பஸ் பாஸ்களை பெற்றுக்கொண்டனர்.