உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தியாகதுருகத்தில் தினமலர் - பட்டம் வினாடி - வினா போட்டி: மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்பு

தியாகதுருகத்தில் தினமலர் - பட்டம் வினாடி - வினா போட்டி: மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி : 'தினமலர்' நாளிதழ் புதுச்சேரி பதிப்பின் இந்தாண்டிற்கான 'பதில் சொல்; பரிசு வெல்' மெகா வினாடி - வினா போட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.புதுச்சேரி, 'தினமலர் - பட்டம்' இதழ் சார்பில், 'பதில் சொல்; பரிசு வெல்' என்ற தலைப்பில் வினாடி - வினா போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான போட்டி, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மொத்தம் 160 பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதனை, 'தினமலர் - பட்டம்' இதழ், புதுச்சேரி ஆச்சாரியா உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நடத்துகிறது.தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல்நிலைப் பள்ளியில் தகுதி சுற்றாக முதல்நிலை தேர்வு நடந்தது. இதில், 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் 1,000 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு பொது அறிவு உட்பட 20 வினாக்கள் கேட்கப்பட்டு தேர்வு நடந்தது. அதில், அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான வினாடி - வினா போட்டி, மவுண்ட்பார்க் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களான 'தினமலர்' நாளிதழ் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், கலெக்டர் பிரசாந்த், ஆச்சாரிய உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவங்களின் தலைவர் அரவிந்தன், மவுண்ட்பார்க் கல்விக்குழும தாளாளர் மணிமாறன், பள்ளி முதல்வர் கலைச்செல்வி ஆகியோர் குத்துவிளக்கேற்றி போட்டியை துவக்கி வைத்தனர்.முன்னதாக பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்தார். தொடர்ந்து, 16 மாணவர்களும் 8 அணிகளாக பிரிக்கப்பட்டு, வினாடி வினா போட்டி மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு சுற்றிலும் 8 கேள்விகள் கேட்கப்பட்டன. 8 அணியினருக்கும் சாய்ஸ் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டன. அதன்பின், அனைத்து அணியினருக்கும் பொதுவான கேள்விகள் கேட்கப்பட்டு, அதில், முதலில் பதில் சொல்லும் அணிக்கு, மதிப்பெண் தரப்பட்டது.ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள் கேள்விகளுக்கு அசத்தலாக பதில் அளித்தனர். மூன்று சுற்றுகளின் முடிவில் பிளஸ் 1 மாணவர்கள் அருணகிரி, கவியரசு ஆகியோரின் 'ஏ' அணி, நாராயணமூர்த்தி, புகழ்ஞானவேந்தர் ஆகியோரின் 'சி' அணி, மாணவிகள் விஷாலி, பிறைமதி ஆகியோரின் 'டி' அணி என மூன்று அணியினரும் தலா 20 மதிப்பெண் பெற்று சம இடத்தை தக்க வைத்தனர். இதனால் 'டை பிரேக்' மூலம் முதல், இரண்டாம் இடத்திற்கான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சரியான விடையை கூறி விஷாலி, பிறைமதி அணி முதலிடம் பிடித்தது.ஆனால், இரண்டாம் இடத்தில் 'ஏ' மற்றும் 'சி' அணியினர் சமமான மதிப்பெண் பிடித்ததால், மீண்டும் 'டை பிரேக்' வாய்ப்பு வழங்கப்பட்டது. கேள்விகளுக்கு துரிதமாக பதில் கூறிய நாராயணமூர்த்தி, புகழ்ஞானவேந்தர் அணி வெற்றி பெற்று இரண்டாம் இடம் பிடித்தது. இவ்விரு அணிகளும் மாநில அளவில் நடக்கும் போட்டிக்கு தேர்வானது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 'தினமலர்' நாளிதழ் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் நினைவுப் பரிசு வழங்கினார். மேலும், போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து மவுண்ட் பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் மணிமாறன் வாழ்த்திப் பேசினர். பள்ளி துணை முதல்வர் முத்துக்குமார் நன்றி கூறினார். 'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி - வினா போட்டியில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு, மாணவ, மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வத்துடன் பதில் அளித்தனர். அணி உறுப்பினர்கள் பதில் அளிக்காத பல கேள்விகள் பார்வையாளர்களிடம் கேட்கப்பட்டது. உடனுக்குடன் பதில் அளித்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரங்கத்தில் இருந்த மாணவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை