உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புறவழி சாலையில் போக்குவரத்து குழப்பம்; தியாகதுருகத்தில் விபத்து அபாயம்

புறவழி சாலையில் போக்குவரத்து குழப்பம்; தியாகதுருகத்தில் விபத்து அபாயம்

தியாகதுருகம்; தியாகதுருகம் புறவழி சாலையில், மேம்பாலம் அமைக்கும் இடத்தில் பணிகள் முழுமையாக முடிக்கப்படாததால், போக்குவரத்து குழப்பம் காரணமாக விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.உளுந்துார்பேட்டை- சேலம் நான்கு வழி சாலையில், 8 இடங்களில் புறவழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. புறவழிச் சாலைகள் அனைத்தும் போக்குவரத்து குறைவாக இருக்கும் என்பதை காரணம் காட்டி இருவழி சாலையாக இருந்தது. இதனால் ஏற்பட்ட விபத்து காரணமாக 12 ஆண்டுகளில் 1,080 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிட்டு, பாதிப்பு குறித்து சுட்டிக்காட்டப்பட்டது. அதையடுத்து, புறவழி சாலைகள் அனைத்தும் நான்குவழி சாலையாக மாற்றப்பட்டு, கடந்தாண்டு பயன்பாட்டிற்கு வந்தது. நான்குவழி சாலையுடன் முக்கிய சாலைகள் சந்திக்கும் இடங்களில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்தது.அதையடுத்து, விபத்து அதிகம் ஏற்படும் 13 இடங்கள் கண்டறியப்பட்டு, 252 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எலவனாசூர்கோட்டை, செம்பியன்மாதேவி, தியாகதுருகம் ஆகிய 3 இடங்களில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. எலவனாசூர்கோட்டை மற்றும் செம்பியன்மாதேவி மேம்பாலம் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.தியாதுருகம் புறவழி சாலை சந்திக்கும் பிரிதிவிமங்கலம் ஏரிக்கரை அருகே மேம்பாலம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை கடந்த 6 மாதங்களுக்கு முன் அதிகாரிகள் துவக்கினர்.இதன் காரணமாக பாலம் அமைய உள்ள இடத்தில் 300 மீட்டர் நீளத்திற்கு நான்கு வழி சாலையாக அகலப்படுத்தாமல், இரு வழி சாலையாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.மேலும், மேம்பாலம் அமைக்கும் இடத்தின் அருகே இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக நான்கு வழி சாலையில் வரும் வாகனங்கள் திடீரென இரு வழி சாலைக்கு திருப்பி விடப்படுவதால் எதிரெதிரே வரும் வாகனங்களால் நிலை தடுமாறி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.புதிதாக இவ்வழிதடத்தில் வருபவர்களுக்கு இந்த இடத்தில் குழப்பம் ஏற்பட்டு அச்சமடைகின்றனர்.குறிப்பாக, இந்த பகுதியில் விளக்கு வெளிச்சம் இல்லாததால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் பீதியுடன், சாலையை கடந்து செல்கின்றனர்.இருவழி சாலையின் நடுவில் ரிப்ளக்டர் பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் பைப்புகளை நட்டு வைத்துள்ளனர்.அவற்றை கனரக வாகன ஓட்டிகள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இதனால் எதிரே வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பெரும் விபத்துகள் நிகழும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மேம்பால பணியை துரிதப்படுத்த வேண்டும்.மேலும், பாலம் அமையவுள்ள இடத்தில் வாகனங்கள் தடையின்றி செல்லும் வகையில் சர்வீஸ் சாலை அமைத்து, பாதுகாப்பாக வாகனங்கள் கடந்து செல்ல 'நகாய்' அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை