மேலும் செய்திகள்
குறைகேட்பு கூட்டத்தில் 505 மனுக்கள் குவிந்தன
14-Oct-2025
சர்வேயர்களுக்கு சங்கடம் தந்த தீபாவளி
21-Oct-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் 162 இடங்களில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், மகளிர் உரிமைத்தொகை உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 41 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் துவங்கப்பட்டது. தமிழக அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களை பொதுமக்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே சென்று வழங்கும் நோக்கத்தில் இத்திட்டம் துவங்கப்பட்டது. நகர்ப்புறங்களில் நடைபெறும் முகாமில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரக பகுதியில் நடைபெறும் முகாமில் 15 துறைகளை சார்ந்த 46 சேவைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. முகாம் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக ஒன்றியம் வாரியாக சப்கலெக்டர் நிலையிலான அலுவலர்கள் 'நோடல்' அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தனர். இம்முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு உதவி செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 1,288 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மகளிர் உரிமைத்தொகை, ஜாதிச்சான்று, பட்டா மாற்றம், வீட்டு மனை பட்டா கோருதல், முதியோர் உதவித்தொகை, வங்கி கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவி, மருத்துவ காப்பீட்டு அட்டை, ரேஷன் கார்டு, மின்வாரியம் தொடர்பான சேவைகள், அடிப்படை வசதிகள் தொடர்பாக கோரிக்கை மனு அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், முகாம் நடைபெற்ற இடங்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர். மாவட்டத்தில் கள்ளக்குறிச்சியில் 8, திருக்கோவிலுார் 10, உளுந்துார்பேட்டை 11 என 3 நகராட்சிகளில் 29 முகாம்கள் நடத்தப்பட்டது. அதேபோல், தியாகதுருகம், சின்னசேலம், மணலுார்பேட்டை, சங்கராபுரம், வடக்கனந்தல் ஆகிய 5 பேரூராட்சிகளில் தலா 2 வீதம் மொத்தம் 10 முகாம்கள், 9 ஒன்றியங்களில் 123 முகாம்கள் நடந்தது. மொத்தமாக மாவட்டம் முழுவதும் 162 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில், அரசு தெரிவித்திருந்த துறைகள் தொடர்பாக 26,096 மனுக்கள், மற்ற துறைகள் தொடர்பாக 31,516 மனுக்கள் என மொத்தமாக 57,612 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்துள்ளனர். இதில், 56,305 மனுக்கள் பரிசீலினைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,307 மனுக்கள் நிலுவையில் உள்ளன. அதேபோல், மகளிர் உரிமைத்தொடர்பாக குடும்ப தலைவிகளிடமிருந்து பெறப்பட்ட 49,429 கோரிக்கை மனுக்களில், 30,139 மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமுள்ள 19,290 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மனுக்களும் சேர்த்து மொத்தமாக ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 41 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் நடந்த முகாமில், மின்வாரியத்துறை சார்ந்த மனு அளித்த பயனாளிகளுக்கு அன்றைய தினமே உடனடியாக தீர்வு காணப்பட்டது குறிப்பிடதக்கது.
14-Oct-2025
21-Oct-2025