கள்ளக்குறிச்சியில் 162 முகாம் ஏற்பாடு: கலெக்டர் பிரசாந்த் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 162 முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு;கடலுார் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முதல் முகாம், வரும் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறியும் வகையில், தமிழ்நாட்டில் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த திட்டம் நவ., மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடக்கிறது. அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்கள் மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவதை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நகர்ப்புற பகுதியில் 39, ஊரகப் பகுதியில் 123 என மொத்தம் 162 முகாம்கள் நடத்தபடுகின்றன. நகர்ப்புறத்தில் 13 அரசுத் துறைகள் மூலம் 43 சேவைகள், ஊரகப் பகுதியில் 15 துறைகள் மூலம் 46 சேவைகள் வழங்கப்படும். மருத்துவ முகாமும் நடத்தபடும். முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மகளிர் உரிமை தொகை பெற தகுதியுள்ள விடுபட்டவர்கள் இருப்பின் முகாமிற்கு சென்று விண்ணப்பம் அளிக்கலாம். இத்திட்டம் குறித்த விபரங்கள் பொதுமக்களுக்கு முறையாக தெரிவிக்க 1,288 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (7ம் தேதி) முதல் துவங்குகிறது. கையேட்டில் முகாம் நடைபெறும் நாள், இடம், வழங்கப்படும் அரசு துறைகளின் திட்டங்கள், சேவைகள், பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவித்து விண்ணப்பம் வழங்குவர்.அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.