ஆற்று திருவிழாவிற்கு 270 போலீசார் பாதுகாப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆற்று திருவிழாவையொட்டி 270 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை மஞ்சு விரட்டு உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி கிராமங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடினர். தொடர்ந்து இன்று(18ம் தேதி) ஆற்று திருவிழா கொண்டாடப்படுகிறது. மாவட்டத்தில் திருக்கோவிலுார், மணலுார்பேட்டை பகுதியில் உள்ள தென்பெண்ணையாறு, கச்சிராயபாளையம் கோமுகி ஆறு ஆகிய பகுதிகளில் ஆற்று திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆற்று திருவிழாவிற்கு வருகை புரிவர். மேலும், சுவாமிகளின் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறும். ஆற்று திருவிழாவில் எவ்வித அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் எஸ்.பி.,ரஜத்சதுர்வேதி மேற்பார்வையில் காவல் துறை மூலம் பாதுகாப்பு பணிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் ஏ.டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் 3 டி.எஸ்.பி.,க்கள், 10 இன்ஸ்பெக்டர்கள், 36 சப் இன்ஸ்பெக்டர்கள், 220 காவல் நிலைய மற்றும் ஆயுதப்படை போலீசார் என மொத்தம் 270 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.