கதர் கிராமத் தொழில் வாரியத்தில் 30 சதவீதம் தீபாவளி தள்ளுபடி விற்பனை; கலெக்டர் பிரசாந்த் துவக்கிவைப்பு
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கதர் கிராம தொழில் வாரியத்தின் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், மகாத்மா காந்தியின் 157-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு கலெக்டர் பிரசாந்த் குத்துவிளக்கேற்றி, மலர் துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட கதர் விற்பனை அங்காடி மூலமாக தரமான அசல் கதர் பட்டு புடவை, கதர் பருத்தி ரகங்கள் மற்றும் கதர் பாலியஸ்டர் ரகங்கள், வேஸ்டி, துண்டு, ரெடிமேட் சட்டை, போர்வை, தரமான இலவம் பஞ்சு மெத்தை, மெத்தை விரிப்புகள், தலையணை, தலையணை உறை, குளியல் மற்றும் சலவை சோப்பு வகைகள், தேன் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தாண்டு ரூ.108 லட்சம் விற்பனை குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டும் தீபாவளி சிறப்பு விற்பனைக்கு கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசு அலுவலர்களும், பொதுமக்களும் கதர் ஆடைகளை வாங்கி கிராம நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டுமென கலெக்டர் பிரசாந்த் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ஜீவா, காதிகிராப்ட் மேலாளர் ஆம்ஸ்ட்ராங், செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் பிரபாகரன் மற்றும் பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.