இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வில் 3165 பேர் பங்கேற்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வில் 3,165 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 412 பேர் தேர்வு எழுத வரவில்லை. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2,743 ஆண்கள், 834 பெண்கள் என மொத்தம் 3,577 விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு எழுதுவதற்காக இணையதளம் மூலம் அழைப்பு கடிதம் அனுப்பட்டது. கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரி, ஏ.கே.டி.,சி.பி.எஸ்.இ., பள்ளி (பெண் விண்ணப்பதாரர்கள்) ஆகிய தேர்வு மையத்தில் நடந்தது. இதில் 3165 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 412 பேர் தேர்வு எழுத வரவில்லை. தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஐ.ஜி., தேன்மொழி தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.