கள்ளக்குறிச்சியில் குழந்தை திருமணம் ஒரே நாளில் 8 வழக்குகள் பதிவானது
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மக்கள் தங்கள் பெண் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் பருவத்தில் 16, 17 வயதிலேயே திருமணம் செய்து வைக்கின்றனர். அதனால் சிறுமியரின் படிப்பை தொடர முடியாமல், எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடப்பதால், குழந்தை திருமணம் புகார்கள் வருவதில்லை. திருமணத்திற்கு பிறகு சிறுமியர் கர்ப்பமாகி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு செல்லும் போது, சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்ட நபர்கள் குறித்து மாவட்ட சமூக நலத்துறைக்கு டாக்டர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.அதன்படி, குழந்தை திருமணம் தொடர்பாக மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் தீபிகா அளித்த புகாரின்படி, நேற்று ஒரே நாளில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எட்டு வழக்குகள் பதிவாகின. சிறுமியை திருமணம் செய்ததாக, காட்டனந்தல் பகுதியைச் சேர்ந்த வல்லரசு, எடுத்தவாய்நத்தம் கார்த்திக், செந்துாரப்பட்டி முத்துசாமி, செம்படாக்குறிச்சி வேல்முருகன்.நைனார்பாளையம் விஜய், பானையங்கால் செல்வம், பழையபல்லகச்சேரி தேவராஜ், வேப்பந்தட்டை பூவரசன் ஆகிய எட்டு பேர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர்.