உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை குறுக்கே தடுப்பணை... தேவை ; குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண மக்கள் கோரிக்கை

மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை குறுக்கே தடுப்பணை... தேவை ; குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண மக்கள் கோரிக்கை

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுடன் பொதுமக்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் தென்பெண்ணை ஆற்றின் மூலம் மூங்கில்துறைப்பட்டு வழியாக கடலூரில் உள்ள கடலில் கலக்கிறது.மூங்கில்துறைப்பட்டை சுற்றியுள்ள மற்றும் எல்லைப் பகுதியில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த, 80க்கும் மேற்பட்ட கிராமங்களில் தென்பெண்ணை ஆற்று நீரைக் கொண்டு தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்ந்து வருகின்றனர்.இந்த கிராமங்களில், 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விவசாயிகளுக்கு தென்பெண்ணை ஆற்றின் நீர் தான் மூலாதாரம். அதுமட்டுமின்றி, கிராமங்களுக்கும் குடிநீர் தங்கு தடை இன்றி கிடைக்க தென்பெண்ணை ஆறு உதவுகிறது.மூங்கில்துறைப்பட்டு பகுதியானது, கூட்டுறவு சர்க்கரை ஆலை, சிறு தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், பள்ளிக்கூடங்கள், பால் குளிரூட்டும் கூடங்கள் என பல்வேறு வகையான தொழில் அம்சங்கள் கொண்டதாக உள்ளது.அதேபோல எல்லைப் பகுதியில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தொகுதியில் வேளாண்மை கல்லூரி, சிறுதொழிற்சாலைகள், ஹோட்டல்கள், துணிக்கடைகள், நகை கடைகள், உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதி கிராமங்களில், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர்.

தடுப்பணை

இந்த மக்கள் பல முறை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை வேண்டுமென்று பல போராட்டங்களை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேரடியாகவும் தபால் மூலமாகவும் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.அதுமட்டுமில்லாமல் அளவிடுமுறையும் பூமி பூஜையும் நடந்தது. பத்து ஆண்டுகள் ஆகியும் அதன் வேலைப்பாடுகள் செயல்படுத்தாமலே கிடப்பில் போட்டுள்ளனர்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் தீராத குடிநீர் பிரச்சினை ஏற்பட்டது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயம் செய்ய முடியாமல் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட கொடுமையும் நடந்தது. வீணாகி கடலில் சேரும் தென்பெண்ணை ஆற்றின் தண்ணீரை தடுப்பணை கட்டி சேமித்தால் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும். அதனால் அரசு, மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ