விளையாட்டு துறையில் சாதிப்பவர்கள் முதல்வர் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்கள் முதல்வர் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு;தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்த விளங்குவோருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. ஆண், பெண் விளையாட்டு வீரர்கள், சிறந்த பயிற்றுனர்கள், சிறந்த உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்கள் என தலா 2 பேருக்கு முதல்வர் மாநில விளையாட்டு விருது, தலா ஒரு லட்சம் ரூபாய், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படுகிறது. விளையாட்டு போட்டிகள் நடத்தும் ஒரு நடத்துநர், நிர்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம், ஒரு நன்கொடையாளர் (ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்) ஆகியோருக்கும் விருது, தங்க பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதன்படி 2024 - 25 மற்றும் 2025 - 26 ஆகிய 2 ஆண்டுகளுக்கான விருது வழங்குவதற்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.விருதிற்கு முந்தைய 3 ஆண்டுகள் விளையாட்டில் பெற்ற சிறந்த வெற்றிகள் இவ்விருதிற்காக கருத்தில் கொள்ளப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விதிமுறைகளின்படி உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய http://www.sdat.tn.gov.inஇணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை- 03 என்ற முகவரிக்கு வரும் ஆக., 11ம் தேதி மாலை 5.45க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.