கள்ளக்குறிச்சி: கிடப்பில் போடப்பட்ட சின்னசேலம் பஸ் நிலைய விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சின்னசேலத்தில் ரயில் நிலையம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், தாலுகா, பேரூராட்சி, பி.டி.ஓ., உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளன. கூகையூர், நைனார்பாளையம், வி.மாமந்துார், குரால், நாககுப்பம், கல்லாநத்தம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக தினமும் சின்னசேலத்திற்கு வந்து செல்கின்றனர்.சின்னசேலம் பஸ் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு 50க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், சேலம் - சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள் சின்னசேலம் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.குறிப்பாக ரயில் நிலையம் இருப்பதால் அதிகளவு பயணிகள் வரும் பகுதியாக உள்ள சின்னசேலத்தில், மிக குறுகிய இடத்தில் பஸ் நிலையம் அமைந்துள்ளது.இங்கு ஒரே நேரத்தில் 5 பஸ்கள் கூட நிற்க முடியாத சூழல் இருப்பதால், வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பஸ்கள் சாலையோரத்திலேயே நின்று பயணிகளை ஏற்றிச் செல்கிறது. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் முறையாக அமரும் வகையில் போதிய இருக்கைகள் இல்லை. இதனால் சின்னசேலம் பஸ் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக கடந்த 2022ம் ஆண்டு பஸ் நிலைய பகுதியில் கலெக்டர் ஷ்ரவன்குமார், உதயசூரியன் எம்.எல்.ஏ., மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது காவல் நிலையம் எதிரே பயன்படாத நிலையில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை அகற்ற முடிவு செய்தனர். மேலும், தற்போதைய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பகுதி வணிக வளாக கடைகளை அகற்றி, பஸ் நிலையத்தை விரிவுபடுத்த முடிவு செய்தனர்.தொடர்ந்து திட்டமிட்டபடி ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. ஆனால், பஸ் நிலைய விரிவாக்கப் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.இதனால் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் இருந்த இடம், தற்போது தனியார் வேன்கள் நிறுத்தும் ஸ்டாண்டாக மாறியுள்ளது. குறுகிய அளவிலான பஸ் நிலையத்தால் பயணிகள் மட்டுமின்றி, பஸ் டிரைவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். குறிப்பாக, காலை மற்றும் மாலை வேளைகளில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சின்னசேலம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே, சின்னசேலம் பஸ் நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.