குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து அரசம்பட்டு கிராம மக்கள் சாலை மறியல் சங்கராபுரம் அருகே பரபரப்பு
சங்கராபுரம்: அரசம்பட்டு கிராமத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது மற்றும் அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. மேலும், 12வது வார்டில் சாலை குண்டும், குழியுமாகவும், அப்பகுதியில் மின்சார வசதியும் இல்லாதது, கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாததது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை 10:00 மணிக்கு அரசம்பட்டு - சங்கராபுரம் மார்க்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தாசில்தார் வைரக்கண்ணன், பி.டி.ஓ., ராதாகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் பிரதாப் ஆகியோர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் பிரச்னைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு காண்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் மறியல் 12:00 மணியளவில் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.