திருக்கோவிலுாரில் பைக், கார், பஸ் நிறுத்துமிடம்... தேவை: கோவிலுக்கு வரும் பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி
திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் நகராட்சி சார்பில் இருசக்கர வாகனம் மற்றும் கார், பஸ் நிறுத்தும் மையத்தை ஏற்படுத்த வேண்டுமென வாகன ஓட்டிகளும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்கோவிலுார் வேகமாக வளர்ந்து வரும் நகரம். நகரின் சுற்றுப் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதன் காரணமாக இங்கிருந்து சென்னை, பெங்களூர், திருச்சி, வேலுார், கன்னியாகுமரி, மதுரை, சேலம் என பல நகரங்களுக்கும் நேரடி பஸ் வசதி உள்ளது. எனவே சுற்று வட்டார கிராமத்தினர் வெளியூர் செல்ல வேண்டும் என்றால், இருசக்கர வாகனங்களில் திருக்கோவிலுார் வந்து வாகனத்தை நிறுத்திவிட்டு, பஸ்சில் பயணிக்கின்றனர். ஏற்கனவே பேரூராட்சி சார்பில் வாகன நிறுத்துமிடம் இருந்தது. ஆனால் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு பஸ் நிலையம் விரிவுபடுத்தப்பட்டதால் வாகன நிறுத்துமிடம் காலி செய்யப்பட்டது. பஸ் நிலையம் அருகே தனி நபர்கள் வாகன நிறுத்தும் இடத்தை நிருவி வசூல் செய்து வருகின்றனர். குறுகலான இந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்த முடியாத சூழலில், சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் வாகனங்களுக்கு பாதுகாப்பாற்ற நிலை உள்ளது. ஆன்மிக நகரமான திருக்கோவிலுாரில் உலகளந்த பெருமாள் கோவிலுக்கு காரில் வரும் பக்தர்களிடம் நகராட்சி சார்பில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், வாகனம் நிறுத்துவதற்கு இடமில்லை. சன்னதி வீதியிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருவதில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், சன்னதி வீதியில் நிறுத்தும்போது கட்டணம் வசூலிப்பவர்களிடம் வாகன ஓட்டிகள், 'ஸ்டாண்ட் என எதுவும் இல்லை. தெருவில் நிறுத்துவதற்கு எதற்கு கட்டணம் வசூலிக்கின்றீர்கள்' என கேள்வி எழுப்புகின்றனர். இதனால், அவ்வப்போது சிறு சிறு வாக்குவாதம் ஏற்படுகிறது. மேலும், குழுவாக சுற்றுலா வரும் பக்தர்களின் பஸ்கள் செவலை ரோட்டில் நகராட்சி அலுவலகம் அருகே நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து ஒரு கி.மீ., துாரம் நடந்து கோவிலுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் வெளியூரில் இருந்து டூரிஸ்ட் பஸ்சில் வரும் பக்தர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். பஸ் நிலையத்திற்கு எதிரே தென்பெண்ணையாற்றை ஒட்டி இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நகராட்சி நிர்வாகம் வாகன நிறுத்தும் இடத்தை ஏற்படுத்தலாம், இது வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பாக இருப்பதுடன், பயணிகளும், பக்தர்களுக்கும் பஸ் நிலையம் மற்றும் கோவிலுக்கு செல்ல அருகாமையில் அமையும் இடமாக இருக்கும். போக்குவரத்திற்கும் பாதிப்பு இருக்காது. நகராட்சி நிர்வாகத்திற்கும் வருமானம் கிடைக்கும். இதற்கு நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.