புத்தகத் திருவிழா ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தகத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் கூறியதாவது : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் புத்தகத் திருவிழா நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் புத்தக அரங்கங்கள், பல்சுவை நிகழ்ச்சிகள், அரசுத் துறைகளின் சிறு கண்காட்சி அரங்குகள் உள்ளிட்டவற்றை அமைத்திடவும், பொதுமக்கள் எளிதில் சென்று வரும் வகையில் பஸ் வசதிகள், காவல்துறையின் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உரிய பாதுகாப்பு வசதிகள், அவசர மருத்துவ உதவிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.கலை நிகழ்ச்சிகள், துப்புரவுப் பணிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.மேலும், அனைத்துத் துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை உரிய முறையில் மேற்கொண்டு புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்திட வேண்டும் என ஆலோசனைகள் வழங்கினார்.