சாத்தனுார் அணை 117 அடி எட்டியதும் திறக்க வாய்ப்பு; பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
திருக்கோவிலுார் : சாத்தனுார் அணை 117 அடியை எட்டியதும் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் சாத்தனுார் அணை நிரம்பினால் வெளியேற்றப்படும் உபரி நீர் மூலம் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்ட விவசாயிகள் பயனடைவர். தென்மேற்கு பருவமழை காலத்தில் கர்நாடக மாநிலம் நந்தி துர்கா மலை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர் இதற்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஆண்டு அப்பகுதியில் போதிய மழை இல்லாததால் சாத்தனுார் அணை நிரம்பாத சூழலில், தென்மேற்கு பருவமழை நிறைவடைந்தது. வடகிழக்கு பருவமழை துவங்கியது. கடந்த 15ம் தேதி தமிழகம் முழுதும் பெய்த அடை மழையை தொடர்ந்து, சாத்தனுார் அணைக்கான நீர்வரத்து துவங்கியது. நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2,430 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 119 அடியில், 107.70 அடிக்கு தண்ணீர் உள்ளது. அதாவது 7,321 மில்லியன் கண்ணாடியில், தற்போது 5,008 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.வழக்கமாக நவம்பர் மாதம் வரை 117 அடி பராமரிக்க வேண்டும். அதற்கு மேல் வரும் தண்ணீர் விவசாய பயன்பாட்டிற்காக வெளியேற்ற வேண்டும். டிசம்பர் மாத துவக்கத்தில் தான் 119 அடி தண்ணீரை அணையில் முழுமையாக தேக்க வேண்டும். அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணை விரைவில் 117 அடியை எட்டும் என்பதால் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.