கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலகம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ரூ.139.41 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக அறிவித்து, கடந்த 2019ம் ஆண்டு நவ., மாதம் துவக்கி வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் தற்காலிகமாக கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வீரசோழபுரத்தில் 35.18 ஏக்கர் பரப்பளவில் ரூ.139.41 கோடி மதிப்பில் 8 தளங்களை கொண்டு அரசின் அனைத்து துறை அலுவலகங்களும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டது. தொடர்ந்து பணிகள் முடிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது. விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளூர் சிலையினை திறந்து வைத்தார். தொடர்ந்து கலெக்டர் அலுவலக அறையில் கலெக்டர் பிரச்சாந்தை அவரின் இருக்கையில் முதல்வர் ஸ்டாலின் அமர வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வேலு, அன்பில்மகேஷ், கணேசன், எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிகண்ணன், மலையரசன் எம்.பி., பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம்சர்மா, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் உட்பட அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.