வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: கலெக்டர் அதிரடி ஆய்வு
கள்ளக்குறிச்சி: வீரசோழபுரத்தில் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் பணியை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நேற்று முன்தினம் துவங்கியது. அதில் உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதிகளில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக சென்று தற்போது வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும், வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கி வருகின்றனர். படிவத்தில் புகைப்படம் ஒட்டி, முழுமையாக பூர்த்தி செய்து, வாக்காளர் அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் ஒருவர் கையொப்பமிட்டு ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்த பின், வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியல் சேர்க்கப்பட உள்ளது. வீரசோழபுரத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கான கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கும் பணியினை கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்து, சிறப்பு தீவிர திருத்த பணியினை முறையாக மேற்கொண்டு வாக்காளர் பட்டியலை தயார் செய்திட வேண்டும் என்று தெரிவித்தார். சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சந்தேகம் மற்றம் புகார்களுக்கு கலெக்டர் அலுவலக கட்டுபாட்டு அறை எண் 1950, உளுந்துார்பேட்டை தொகுதி 04149-222255, ரிஷிவந்தியம் 04151-235400, சங்கராபுரம் 04151-235329, கள்ளக்குறிச்சி 04151-222449 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆய்வின்போது, தாசில்தார் பசுபதி உள்ளிட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.