ரிஷிவந்தியம் ஒன்றிய வளர்ச்சி திட்ட பணிகள்; கலெக்டர் ஆய்வு
ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். ரிஷிவந்தியம் ஒன்றியம், கடம்பூர் ஊராட்சியில் துாய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பில் சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணியை கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் ரூ.6.77 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சிறுபாலம், மேட்டுத்தெருவில் ரூ.3.88 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.21 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தானிய உலர் களம், கனவு இல்ல திட்டத்தின்கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடு மற்றும் ஏரிக்கரை பலப்படுத்தும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். மரூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட சிறுபாலம், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்படும் பயணியர் நிழற்குடை, பெரியகொள்ளியூர் ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையும் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்கு பின்பு கலெக்டர் பிரசாந்த நிருபர்களிடம் கூறியதாவது; மழைக்காலங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், கடம்பூர் ஏரிக்கரை பலப்படுத்தும் பணி நடக்கிறது. நாற்றாங்கால் பண்ணையில் தண்ணீர் ஊற்றி மரக்கன்றுகளை பராமரிக்கவும், வளர்ச்சி திட்ட பணிகளை முறையாகவும், தரமாகவும் மேற்கொண்டு, உரிய காலத்தில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார். ஆய்வின்போது பி.டி.ஓ.,க்கள் ஜெகநாதன், துரைமுருகன் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.