மேலும் செய்திகள்
பருவமழை முன்பாகவே நிரம்பிய 8 ஏரிகள்
17-Oct-2025
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஆடிப்பட்டம் நாற்று விட்டு, சம்பா நடவு பணியை துவங்குவது வழக்கம். இதற்கு தென்மேற்கு பருவமழை சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை இப்பகுதியில் குறிப்பிட்டு சொல்லும் வகையில் இல்லை. இதன் காரணமாக சம்பா சாகுபடியை துவங்காமல் விவசாயிகள் வடகிழக்கு பருவ மழையை எதிர்நோக்கி காத்திருந்தனர். அதற்கேற்றார் போல் இம்மாத துவக்கத்திலிருந்து சீரான அளவில் மழை பெய்ய துவங்கியது. இதனால் ஏரி, குளங்களுக்கான நீர்வரத்து துவங்கியது. அதே நேரத்தில் இவ்விரண்டு மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் தென்பெண்ணை ஆற்றிலும் கடந்த சில நாட்களாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதன் மூலம் திருக்கோவிலுார் அணைக்கட்டில் இருந்து பம்பை வாய்க்கால் வழியாக புதுச்சேரி மாநிலம், வாதானுார் வரை 26 ஏரிகளுக்கும், மலட்டாறு மூலம் இளந்தம்பட்டு வரை 14 ஏரிகளும், ராகவன் வாய்க்கால் மூலம் திருநாவலுார் வரை 54 ஏரிகளும், நேரடியாக பல ஏரிகள் உட்பட என 125க் கும் அதிகமான ஏரிகளுக்கு தற்பொழுது தண்ணீர் செல்வதன் மூலம் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி துவங்க விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக நாற்றங்கால் தயார் செய்யும் பணியை துவக்கி இருக்கும் நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பது விவசாயிகளை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆற்று வாய்க்கால் மூலம் தண்ணீர் நிரம்பாத ஏரிகளும் தற்போது பெய்து வரும் மழையில் நிரம்ப துவங்கியுள்ளது. இது மட்டுமின்றி நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக சம்பா சாகுபடிக்கு முழு அளவில் விவசாயிகள் தயாராகி வருகின்றனர். அதே நேரத்தில் விதை நெல், உரத்தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் முன்வைக்கின்றனர். சம்பா சாகுபடிக்கான நாற்றங்கால் தயார் செய்ய ஆயத்தமாகி வரும் அதே நேரத்தில் வடகிழக்கு பருவமழை குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக இருக்கும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு விவசாயிகளை சற்று கலக்கமடைய செய்திருக்கிறது. கடந்த ஆண்டு பெஞ்சல் புயல் வெள்ளத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அது போன்று இல்லாமல் சீரான அளவில் மழைப்பொழிவு இருக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்பொழுது சாத்தனுார் அணை நிரம்பி இருப்பதால் இந்த ஆண்டு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்ட ஆற்றுப் பாசன விவசாயிகள் இரு போக சாகுபடி மேற்கொள்வது உறுதியாகி இருப்பது விவசாயிகளுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17-Oct-2025