கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி; தம்பதி மீது வழக்கு
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அடுத்த இளையனார்குப்பத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் வெங்கடேசன்,37; இவருக்கும், இவரது உறவினர் சிவா என்பவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்னை உள்ளது. இப்பிரச்னை தொடர்பாக நேற்று காலை இருவரும் தாக்கி கொண்டனர். இந்நிலையில், வெங்கடேசன் மற்றும் இவரது மனைவி தமிழ்செல்வி ஆகிய இருவரும் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை 11.30 மணிக்கு வந்தனர். அங்கு இருவரும் கொண்டு வந்த டீசலை தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருவரையும் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். நிலப்பிரச்னை தொடர்பாக தகராறு செய்து தாக்கிய உறவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். தொடர்ந்து, போலீசார் இருவரையும் கள்ளக்குறிச்சி போலீஸ் ஸடேஷனுக்கு அழைத்து சென்றனர். மேலும், தீக்குளிக்க முயன்ற வெங்கடேசன், தமிழ்செல்வி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.