உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நீர் நிலைகளில் பாதுகாப்பற்ற குளியலால் அபாயம்! உயிரிழப்புகளை தடுக்க விழிப்புணர்வு தேவை

நீர் நிலைகளில் பாதுகாப்பற்ற குளியலால் அபாயம்! உயிரிழப்புகளை தடுக்க விழிப்புணர்வு தேவை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீர் நிலைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் சிறுவர்கள், இளைஞர்கள் ஆபத்தை உணராமல் குளிப்பதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவ மழை காலங்களில் அணைகள், ஏரிகள், குளம் மற்றும் ஆறுகளில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிந்து காணப்படும். நீர் நிலைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் இளைஞர்கள், மாணவர்கள், சிறுவர்கள் குளிக்கின்றனர். அப்போது, பலர் தண்ணீரில் மூழ்கி இறந்து போகும் சம்பவங்கள் ஆண்டுதோறும் நிகழ்ந்து வருகிறது. கடந்தாண்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதி நீர் நிலைகளில் குளித்த சிறுவர்கள், மாணவர்கள் மற்றும் சில இளைஞர்கள் உட்பட பலர் நீரில் மூழ்கி இறந்தனர். மாவட்டத்தில் தற்போது வடக்கிழக்கு பருவ மழை துவங்கி கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்து வருவதால், நீர் நிலைகள் நிரம்ப துவங்கியுள்ளது. கிராமப் புறங்களில் உள்ள சிறுவர்கள் நீர் நிலைகளில் ஆபத்தை உணராமல் பாதுகாப்பற்ற முறையில் குளிக்கின்றனர். குறிப்பாக குளம், ஏரிகளில் சேறு சகதி அதிகம் நிரம்பி உள்ளது. அத்தகைய நீர் நிலைகளில் சிறுவர்கள் உயரமான இடங்களில் குதித்து நீந்தி விளையாடி மகிழ்கின்றனர். குறிப்பாக 10 வயதிற்கும் குறைவான சிறுவர்கள் பாதுகாப்பு இன்றி குளிக்கின்றனர். அதிகளவு ஆழம், பாறை இடுக்கு, சேரும் சகதியும் மிகுந்த பகுதியில் குளிக்கும்போது, எதிர்பாராவிதமாக சிறுவர்கள் தண்ணீரில் உள்ள சகதிகள், பாறை இடுக்கில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது. ஒரே நேரத்தில் 2, 3 சிறுவர் சிறுமிகள் நீரில் மூழ்கி இறக்கும் துயர சம்பவங்களும் நிகழ்கிறது. இதனை தடுக்க நீர் நிலைகளில் குளிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பள்ளி, கல்லுாரிகளில் மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை தொடர்ந்து கண்காணித்து, எச்சரிக்கை செய்ய வேண்டும். கடந்த காலங்களில் நீர் நிலைகளில் குளிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக போலீஸ், வருவாய் துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை மூலம் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் விழிப்புணர்வு படங்கள் மற்றும் வாசகங்கள் அடங்கிய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. அதேபோல் இந்தாண்டும் விழிப்புணர்வு எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும்.

ஆபாயகரமான பள்ளம்

ஏரி, குளம், குட்டைகளிலிருந்து விவசாய தேவைக்காக வண்டல் மண், களி மண் எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கபட்டது. அப்போது, ஒரே இடத்தில் பள்ளம் தோண்டாமல் பரவலாக அள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியது. ஆனால், பல ஏரிகளில் முறைகேடாக அளவுக்கு அதிகமாக ஒரே இடத்தில் பல அடி ஆழத்திற்கு தோண்டி மண் எடுத்துள்ளனர். தற்போது அவற்றில் மழைநீர் தேங்கி உள்ளது. இதில் ஆழம் தெரியாமல் பள்ளத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உருவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி