மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு ரூ.17 லட்சம் பயிர் சேத இழப்பீடு
19-Sep-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., ஜீவா, வேளாண்மை இணை இயக்குநர் சத்தியமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜோதிபாசு, வேளாண்மை உதவி இயக்குநர் அன்பழகன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார்கள் குறித்து விவசாயிகள் பேசியதாவது; உளுந்துார்பேட்டை அடுத்த செங்கனாங்கொல்லை பகுதியில் கரும்பு பயிரில் நோய் தாக்குதல் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் நஷ்டம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நோய் தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலம் துவங்க உள்ளதால், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்டம் முழுதும் தாழ்வான நிலையில் உள்ள மின் கம்பிகளை அகற்றி, புதிய கம்பி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை சார்பில் 70 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்க வேண்டும். மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்கின்றனர். தற்போது மரவள்ளிக்கிழங்கு விலை கனிசமாக குறைந்துள்ளதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே மரவள்ளிக் கிழங்கிற்கு குறைந்தபட்ச ஆதார விலையும், லாரி வாடகை மற்றும் வெட்டுக்கூலியை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். கல்வராயன்மலையில் வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க வேண்டும். திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கடந்த 4 மாதங்களாக விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. எனவே மாதந்தோறும் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும். பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.6 ஆயிரம் பலருக்கு கிடைக்கவில்லை. விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடு இல்லாமல் போதிய அளவில் இருப்பு வைத்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கராபுரம் நகரில் பூட்டை சாலையில் இயங்கி வரும் 3 டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும். மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, மணிலா, மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதால் விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்படுகிறது. காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கராபுரம் பஸ் நிலையத்தில் புறநகர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் தகுதியான பயனாளிகளுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரக்கடைகளில் வாங்கப்படும் பொருட்களுக்கு முறையான ரசீதுகள் வழங்கப்படுவதில்லை. எம்.குன்னத்துாரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர். கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
19-Sep-2025