கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே தொழிற்சாலை அமைய உள்ள இடத்தில் கிராம மக்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.உளுந்துார்பேட்டை தாலுகா, ஏ.சாத்தனுார் எல்லைப் பகுதியில், பில்லுார் - எலவனாசூர்கோட்டை சாலையில் தோலில்லா காலணி தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த தொழிற்சாலை அமைய உள்ள பகுதி அருகே உள்ள வழிப்பாதையை, உளுந்துார்பேட்டை அடுத்த குணமங்கலம் கிராம மக்கள், மங்கலம்பேட்டை உள்ளிட்டு பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல பயன்படுத்தி வருகின்றனர்.தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில், வேலி அமைக்கும் பணி நடந்த போது குணமங்கலம் பகுதி மக்கள் செல்லும் வழிப் பாதையையும், தொழிற்சாலை நிர்வாகம் கையகப்படுத்தி அதனைச் சுற்றி வேலியை அமைத்தது. அதற்கு பதிலாக மாற்று வழிப்பாதையை குணமங்கலம் மக்கள் பயன்படுத்துவதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது.ஆனால், குணமங்கலம் பகுதி மக்கள் ஏற்கனவே பயன்படுத்தி வந்த வழிபாதை தான் தேவை என கோரிக்கை வைத்து, தொழிற்சாலை அமையவுள்ள வளாகத்தில் நேற்று காலை 11:30 மணிக்கு, 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, மதியம், 12:20 மணியளவில் கலைந்து சென்றனர்.