கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் பள்ளியில் தினமலர்- - பட்டம் இதழ் வினாடி- வினா போட்டி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழின் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம், பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழின் வினாடி வினா போட்டிக்கான தகுதி சுற்று போட்டி நடத்தப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று, முன்னணி மதிப்பெண் பெற்ற 16 மாணவிகள் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடந்த வினாடி வினா போட்டிக்கு பள்ளி தலைமை ஆசிரியை கீதா தலைமை தாங்கினார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் வசந்தா முன்னிலை வகித்தார். பட்டம் இதழின் பொறுப்பாசிரியை தேவிமயில் வரவேற்றார். 8 குழுக்களாக பிரிக்கப்பட்ட மாணவிகளுக்கு இரண்டு சுற்றுகளாக வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் 8ம் வகுப்பு மாணவிகள் நவீனா மணிகண்டன், காருண்யா அணியினர் முதலிடம் பிடித்தனர். 9-ம் வகுப்பு மாணவிகள் நிவியா, நேஷிகா அணியினர் இரண்டாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற இரு அணிகளுக்கும் 'தினமலர் பட்டம்' இதழை பள்ளிக்கு இலவசமாக வழங்கும் கள்ளக்குறிச்சி மையா பெண்கள் அறக்கட்டளை நிறுவனர் குமார் சான்றிதழ், கேடயம், பதக்கம் வழங்கி பாராட்டினார். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற இப்பள்ளி மாணவகளின் இரு அணிகளும் புதுச்சேரியில் நடக்கும் இறுதி போட்டியில் பங்கேற்க உள்ளனர். போட்டிகளை பள்ளி ஆசிரியைகள் ஜெயசித்ரா, லாவண்யா, சத்யபிரியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.