மேலும் செய்திகள்
அரசியல் 'புயல்' ஓயப்போவதில்லை
01-Jan-2025
ரிஷிவந்தியம் தொகுதியில் தி.மு.க., வின் பரிசு மழையில் நனையும் மக்களுக்கு, தேர்தல் நெருங்கும் வேளையில் பல பரிசுகள் காத்திருப்பதாக சூசகமாக கூறுகின்றனர் உடன்பிறப்புகள்.நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ரிஷிவந்தியம் சட்டசபைத் தொகுதியில், கடந்த தேர்தலை காட்டிலும் தி.மு.க., குறைவான ஓட்டுகளை பெற்றது. இது தி.மு.க., வின் பலம் சரிந்துள்ளதையே காட்டுவதாக அமைந்தது. இத்துடன் ஆளும் கட்சியின் மீதான மக்களின் அதிருப்தி, எதிரணியில் அமைய இருக்கும் கூட்டணி குறித்த பயம் உள்ளிட்ட பல காரணிகள் ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., வை சற்று அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.இதன் காரணமாக கட்சியினரை உற்சாகப்படுத்தவும், மக்களை தன்வசப்படுத்திக் கொள்ளவும் தி.மு.க., பல அதிரடி அரசியலை கையில் எடுத்துள்ளது.தற்பொழுது மேல்மருவத்தூர் கோவிலுக்கு பெண்கள் மாலை அணிந்து பயணம் மேற்கொள்ளும் நிலையில், ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் மன்றங்களுக்கு அவர்கள் புறப்படுவதற்கு முதல் நாள் ஒவ்வொருவருக்கும் செவ்வாடை, தலா ரூ. 100 பண பட்டுவாடா செய்யப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு ஒவ்வொரு கிராமத்திற்கும் முக்கிய நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்களை மகிழ்விக்கும் வகையில், 200க் கும் மேற்பட்ட கேரியர், கேலண்டர் வழங்கப்பட்டு வருகிறது.இது மட்டுமல்ல வரும் பொங்கலுக்கு கறி விருந்துடன் பண கவனிப்பும், புத்தாடைகளும் பலமாக இருக்கும் என்று மார்தட்டிக் கொள்கின்றனர் உடன்பிறப்புகள்.இப்படி தொகுதி முழுவதும் தி.மு.க., பல அதிரடிகளை அரங்கேற்றி வரும் நிலையில், போகப் போக மக்களை கவரும் மேலும் சில கவனிப்புகளும் இருக்கும் என கூறப்படுகிறது. எதிரணியின் பலத்திற்கு ஏற்ப தி.மு.க., வின் ஆட்டம் அதிகரிக்கும் என்பதால் எதிரில் களமிறங்க நினைக்கும் கட்சியினரும் சற்று கலக்கத்தில் தான் உள்ளனர்.
01-Jan-2025