உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / எலவனாசூர்கோட்டை சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?: போக்குவரத்து நெரிசலால் தினமும் விபத்து

எலவனாசூர்கோட்டை சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?: போக்குவரத்து நெரிசலால் தினமும் விபத்து

உளுந்துார்பேட்டை: எலவனாசூர்கோட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகளால் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு, வாகன விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை பகுதி முக்கிய சந்திப்பு சாலை பகுதியாக உள்ளது. சென்னை, சேலம், திருச்சி, மதுரை, வேலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு எலவனாசூர்கோட்டை பகுதி வழியாக தான் வாகனங்கள் கடந்து செல்ல வேண்டியுள்ளது. அதிக வாகன போக்குவரத்து இருப்பதால் இவ்வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக திருவண்ணாமலை, வேலுார் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் திருச்சிக்கு உளுந்துார்பேட்டை பகுதிக்கு சென்று வருவதை தவிர்த்து எலவனாசூர்கோட்டை- ஆசனுார் சாலை வழியாக குறுகிய நேரத்தில் சென்று வருவதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இவ்வழிப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர். வாகன போக்குவரத்து அதிகமாக இருந்த போதிலும் சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் ஆக்கிரமிப்புகளால் சாலைகள் குறுகியே உள்ளது. சாலை வழியை குறிப்பிடும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள இடத்தையும் சேர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து கடைகளை கட்டி வைத்துள்ளனர். இதனால் வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டி அறிவிப்பு பலகை கூட தெரியாத நிலையால் குழப்பத்தில் அவ்வழியை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. வாகனங்கள் எளிதாக செல்ல முடியாததால் போக்குவரத்து பாதிப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருவது தொடக்கதையாகி வரும் நிலையில், அவ்வப்போது வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த எலவனாசூர்கோட்டை பகுதியில் வாகனங்கள் எளிதில் செல்ல முடியாமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தினசரி அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால் பல வாகனங்கள் எலவனாசூர் கோட்டை பகுதிக்குள் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலைகளிலேயே செல்கின்றனர்.இதன் காரணமாக பஸ்சுக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட கூடுதல் வாகன போக்குவரத்துஇருக்கும் இந்த நேரங்களில் போக்குவரத்து வரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி பல மணி நேரம் காத்திருக்கும் அவலநிலை ஏற்படுகிறது. இது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம், போலீசார், நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கான நடவடிக்கைகளை துறை அதிகாரிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை