ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நன்னெறி வழிகாட்டு கருத்தரங்கம்
கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பணி தேர்வு செய்தல், சமூகத்தில் அங்கீகாரத்தை நிலை நிறுத்துதல் மற்றும் மண வாழ்க்கை குறித்த நன்னெறி வழிகாட்டு கருத்தரங்கம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த கருத்தரங்கிற்கு கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் வரவேற்றார். டீன் அசோக் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த்துறை தலைவி பிரவீனா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். வாழ்க்கை திறன் ஊக்குவிப்பாளர் சென்னை உஷா ராமகிருஷ்ணன் பங்கேற்று பேசியதாவது; கல்லுாரி படிப்பை முடித்தவர்கள் சில நாட்கள் மட்டுமே வேலை தேடி சிரமப்படுகின்றனர். வேலை கிடைக்கவில்லையெனில் ஏதேனும் ஒரு வேலைக்கு சென்று படித்த துறையை மறந்து விடுகின்றனர். அதுபோல இல்லாமல் தாங்கள் படித்த துறை சார்ந்த பணிக்கு செல்ல வேண்டும். நல்ல நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து, சமூகத்தில் தங்களை அடையாளப்படுத்தி அங்கீகாரத்தை நிலை நிறுத்த மேற்கொள்ள வேண்டிய செயல்கள், மண வாழ்க்கையை சரியாக தேர்வு செய்தல் குறித்து பேசினார். கருத்தரங்கில் பேராசிரியர்கள், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வேதியியல் துறை பொறுப்பாசிரியர் சங்கீதா நன்றி கூறினார்.