உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு சலுகைகளை பெற முடியாத விவசாயிகள்; அதிகாரிகள் ஒருதலைபட்சம்; வேளாண் துறையில் அவலம்

அரசு சலுகைகளை பெற முடியாத விவசாயிகள்; அதிகாரிகள் ஒருதலைபட்சம்; வேளாண் துறையில் அவலம்

தியாகதுருகம்; தியாகதுருகம் வேளாண் துறை மூலம் அரசு வழங்கும் சலுகைகளை சிறு குறு விவசாயிகளால் பெற முடியாததால் ஏமாற்றத்தில் உள்ளனர்.தியாகதுருகம் வேளாண்மை அலுவலகம் மூலம் சுற்றி உள்ள, 50 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அரசின் சலுகைகள் மற்றும் வேளாண் வளர்ச்சி தொடர்பான திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது. இதில் பெரும்பாலான திட்டங்களும், சலுகைகளும் சிறு குறு விவசாயிகளுக்கு முழுமையாக சென்று சேர்வதில்லை. அரசியல் பிரமுகர்கள் பரிந்துரைக்கும் விவசாயிகளுக்கே பெரும்பாலான அரசின் சலுகைகள் சென்று சேர்கின்றன. இதனால், வேளாண் அலுவலகத்திற்கு செல்லும் விவசாயிகள் தொடர்ந்து அலைகழிக்கப்படுவது வாடிக்கையாக அரங்கேறி வருகிறது. இதனால் சிறு குறு விவசாயிகள் அரசின் திட்டங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடன் வெற்று அறிவிப்புகளை நம்பி வேளாண் அலுவலகத்திற்கு பலமுறை நடந்தும் ஏமாற்றமே அடைகின்றனர்.குறிப்பாக விவசாயத்திற்கு பயன்படும் இயந்திரங்கள், பூச்சி மருந்து தெளிப்பான், உழவு டிராக்டர்கள் உள்ளிட்டவைகள் அரசியல்வாதிகளின் பரிந்துரை இருந்தால் மட்டுமே பெற முடியும் என்ற நிலை உள்ளது. இதற்கு இங்குள்ள அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருப்பதால் ஏழை விவசாயிகள் பலரும் அரசின் திட்டங்களை பெற முடியாமல் பரிதவிக்கின்றனர்.இதன் காரணத்தால் விதை, உரம், இடுபொருட்கள், பூச்சி மருந்துகள் உள்ளிட்டவைகளை தனியார் நிறுவனங்களில் அதிக விலை கொடுத்து விவசாயிகள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. ஒவ்வொரு திட்டத்திலும் பயனாளிகள் தேர்வு செய்வதிலும் அதிகாரிகள் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக ஆளும் கட்சியினருக்கே பெரும்பாலான திட்டங்கள் மற்றும் அரசு சலுகைகள் சென்று சேர்வதாக ஆதங்கப்படுகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளால் அரசின் மீது விவசாயிகள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.தகுதியானவர்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ