மது போதையில் பஸ் ஓட்டிய அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்
கள்ளக்குறிச்சி; போதையில் பஸ் ஓட்டிய அரசு பஸ் டிரைவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். விழுப்புரம் கோட்ட அரசு பஸ், 50க்கும் மேற்பட்ட பயணியருடன் நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு, கள்ளக்குறிச்சியில் இருந்து பெங்களூரு புறப்பட்டது. தியாகதுருகம் அடுத்த பானையங்கால் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் எழிலரசன், 47, பஸ்சை ஓட்டினார். கள்ளக்குறிச்சி, கோட்டைமேடு வளைவு அருகே சென்ற பஸ், சாலையோரம் இருந்த ஒரு பைக் மீது திடீரென மோதியது. பின், சாலை தடுப்பு கட்டை மீது மோதி வேகமாக செல்ல முயன்றது. பயணியர் சத்தம் போட்டனர். டிரைவர் மதுபோதையில் பஸ்சை ஓட்டியது தெரியவந்தது. பஸ்சை நிறுத்துமாறு பயணியர் கூச்சலிட்டனர். ரோடுமாமந்துார் பஸ் ஸ்டாப்பில் பஸ்சை நிறுத்தி, டிரைவர் தப்பியோடினார். கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்தனர். மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு, பயணியர் அனுப்பி வைக்கப்பட்டனர். டிரைவர் எழிலரசனை சஸ்பெண்ட் செய்து, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் ஜெய்சங்கர் உத்தரவிட்டார்.