விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை; கலெக்டர் திட்டவட்டம்
திருக்கோவிலுார் : திருக்கோவிலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மூன்று மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். திருக்கோவிலுார் மருத்துவமனை வளாகத்தில், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ரூ.54 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதமே பணிகள் முடிந்திருக்க வேண்டிய நிலையில், காலதாமதம் ஆவதால் நோயாளிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து தினமலர் நாளிதழில், நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில் இந்த பணிகளை நேற்று கலெக்டர் பிரசாந்த் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரான, நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். ஆறு தளங்களையும் பார்வையிட்டு கட்டுமான பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் பணியை விரைந்து முடிக்கவும், டாக்டர்களுடன் ஒருங்கிணைந்து தேவைப்படும் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும் அறிவுறுத்தினார்.இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் கூறுகையில், 'கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்ட நிலையில், எலக்ட்ரிகல் உள்ளிட்ட இதர பணிகள் நிலுவையில் உள்ளன. இந்த பணிகள் வரும் மூன்று மாதத்திற்குள் விரைந்து முடிக்கப்பட்டு, மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்,'என்றார். இந்த ஆய்வின்போது சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங், உதவி ஆட்சியாளர் சுப தர்ஷினி, இணை இயக்குனர் நளினி, கோட்ட பொறியாளர் செல்வகுமார், தாசில்தார் ராமகிருஷ்ணன், கோட்டக்கலால் அலுவலர் சிவசங்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.