தி.மு.க.,வினருக்கே சென்றடையும் அரசு திட்டங்கள்; ஆளுங்கட்சி மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும்பாலான அரசு நலத்திட்டங்கள் தி.மு.க.,வினருக்கே வழங்கி வருவதால் ஆளுங்கட்சி மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.அரசின் பல்வேறு துறை சார்ந்த நலத்திட்டங்கள், சலுகைகள் மற்றும் இலவசங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு வழங்கப்படுகிறது. விவசாயம் பிரதான தொழிலாக உள்ள இம்மாவட்டத்தில் அதை சார்ந்த திட்டங்கள் இலவசமாகவும் சலுகை விலையிலும் மானியத்தில் வழங்கப்படுகிறது.வேளாண் கருவிகள், இயந்திரங்கள் இடுபொருட்கள், உரங்கள், விதைகள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறு, குறு விவசாயிகள் பயனடைய வழங்கப்படுகிறது.தொழிலாளர் நல வாரியம் சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு வழங்கப்படுகிறது.சமூக நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, கால்நடை பராமரிப்பு பால்வளத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உட்பட பல துறைகள் சார்பில் மக்களுக்கு இலவசங்களும் சலுகை விலையில் அந்தந்த தொழில் சார்ந்த திட்டங்கள் வழங்கப்படுகிறது.இவைகளை பெறுவதற்கு முக்கிய அடிப்படை தகுதி தி.மு.க.,வினராக இருக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எழுதப்படாத சட்டமாக உள்ளது.பெரிய அளவில் பயன் தரும் திட்டங்கள் தி.மு.க.,வின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் தங்களின் உறவினர் பெயர்களில் பெற்றுக் கொள்கின்றனர்.அவர்கள் எடுத்துக் கொண்டது போக மற்றவை தான் உண்மையான பயனாளிக்கு சென்று சேருவதாகவும் அதுவும் தி.மு.க., உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எங்காவது பிற கட்சியினர் தங்களுக்கு கொடுத்தே ஆக வேண்டுமென பிரச்னை செய்தால் மட்டுமே அவர்களை சரிகட்ட அந்த சலுகை வேறு வழியின்றி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.வரும் சட்டசபை தேர்தலை கணக்கில் கொண்டு தி.மு.க.,வினருக்கே சலுகைகள் அனைத்தும் வழங்கப்பட்டால் மற்றவர்களை புறக்கணிப்பது எந்த வகையில் நியாயம் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.ஆளுங்கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களின் கட்டாயத்தின் பேரில் ஒரு தலைப்பட்சமாக அரசின் சலுகைகளை வழங்குவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.