தீபாவளி சீட்டு நடத்தி மோசடி அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்
கள்ளக்குறிச்சி : உளுந்துார்பேட்டை அருகே தீபாவளி சீட்டு நடத்தி பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.உளுந்துார்பேட்டை அடுத்த கீழப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் மகன் முரளி,46; இவர், நெடுமானுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்தார். இவரது மனைவி ஜெயா,40; எலவனாசூர்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இருவரும் தீபாவளி சீட்டு நடத்துவதாக கூறி, 143 பேரிடம் பல லட்ச ரூபாய் பணம் வசூலித்து, முதிர்வு தொகையை திருப்பித்தராதது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அரசு பள்ளி ஆசிரியர் முரளி மற்றும் ஜெயா ஆகிய இருவரையும் எலவனாசூர்கோட்டை போலீசார் கடந்த 23ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து, அரசு பள்ளி ஆசிரியர் முரளியை பணியிடை நீக்கம் செய்து, கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதிமணி உத்தரவிட்டுள்ளார்.