உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மணிமுக்தா அணையில் கிராவல், மணல் திருட்டு... தொடர்கதை! கண்டுகொள்ளாத அதிகாரிகளால் மக்கள் அதிருப்தி

மணிமுக்தா அணையில் கிராவல், மணல் திருட்டு... தொடர்கதை! கண்டுகொள்ளாத அதிகாரிகளால் மக்கள் அதிருப்தி

கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியின் குறுக்கே 36 அடி உயரம் (736.96 மில்லின் கன அடி கொள்ளளவு) கொண்ட மணிமுக்தா அணை உள்ளது. கல்வராயன்மலையில் விழும் மழை நீர் மணி மற்றும் முக்தா ஆறுகள் வழியாக அணைக்கு வருகிறது. மழைக்காலத்தில் அணையில் தண்ணீர் சேமித்து வைத்து, விவசாயத்திற்காக பாசன கால்வாய் வழியாக திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் சுற்று வட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த 5,493 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பயன்பெறும். விவசாயத்திற்கும், குடிநீருக்கும் முக்கிய நீர் ஆதாரமாக மணிமுக்தா அணை உள்ளது.கடந்த டிசம்பர் மாத துவக்கத்தில் பெஞ்சல் புயலால் பெய்த மழையால் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், உபரி நீர் ஆறு வழியாக வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து, பாசன கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால், தற்போது அணையின் ஆழமான பகுதியில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. இதில், அணையின் கரை ஓரப்பகுதியில் உள்ள கிராவல் மண் அள்ளப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரை ஒன்றுக்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி, டிப்பர் லாரிகளில் மணலை ஏற்றி செல்கின்றனர்.எவ்வித அரசு அனுமதியுமின்றி இந்த கிராவல் மண் அள்ளுவதாகவும், விவசாய பயன்பாட்டிற்கும், அரசு பணிக்கும் பயன்படுத்தாமல் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்ய டிப்பர் லாரிகளில் கிராவல் மண் அள்ளி செல்வதாகவும் அப்பகுதி மக்கள், விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மண் திருட்டு நடந்து வருகிறது. ஒரு சில நாட்களில் அரசு அனுமதி பெற்று கிராவல் மண் அள்ளினாலும், வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றுவதில்லை. ஒரு முறை ஆணை பெற்று, பல முறை மண் அள்ளப்படுவதால் அப்பகுதியில் மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.அங்குள்ள மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அணையில் நடைபெறும் மண் திருட்டை கண்டுகொள்ளாமல் மவுனமாக இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். எனவே, மணிமுக்தா அணையில் நடைபெறும் மண் திருட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி