குரூப் 4 தேர்வு ஆய்வு கூட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள குரூப் 4 தேர்வு தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சியில் மாவட்டத்தில் இன்று 12ம் தேதி, குரூப் 4 தேர்வு நடக்கிறது. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை மற்றும் வாணாபுரம் தாலுகாக்களில், 97 தேர்வு மையங்களில் 28,211 பேர் தேர்வெழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து வரப்பெற்ற பிரிவு அலுவலர், உதவி பிரிவு அலுவலர்கள், பறக்கும் படை, கண்காணிப்பு, சுற்றுக்குழு மற்றும் ஆய்வு அலுவலர்கள், தேர்வு மையங்களின் தலைமை கண்காணிப்பாளர்கள், போலீசார் ஆகியோருடன் ஆய்வு கூட்டம் நடந்தது. வருவாய்த்துறை, நகராட்சி, பேரூராட்சி உட்பட அனைத்து துறைகள் சார்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.தேர்வர்கள் காலை 8.30 மணியளவில் தேர்வு மையத்திற்கு வர வேண்டும். காலை 9 மணிக்கு மேல் வருபவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், திருக்கோவிலுார் சப்கலெக்டர் ஆனந்த்குமார் சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, ஆர்.டி.ஓ., லுார்துசாமி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.