ஒரு மரம் அகற்றினால் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் : கலெக்டர் அட்வைஸ்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு மரம் அகற்றினால், அதற்கு இணையாக 10 மரக்கன்றுகள் வீதம் நடப்பட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான பசுமைக் குழு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட பசுமைக் குழுவிற்கு வந்துள்ள முன்மொழிவுகள் தொடர்பாக பசுமைக் குழுக்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மரங்களை அகற்றும் பொழுது, அகற்றும் மரங்களுக்கு இணையாக ஒரு மரத்திற்கு 10 மரக்கன்றுகள் வீதம் நடப்பட வேண்டும். நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைத்து நீர் பாய்ச்சி பராமரிக்க வேண்டும். மரங்களை நடவு செய்யும் பொழுது பலன் தரும் மரங்களை மட்டுமே நடவேண்டும். நெடுஞ்சாலைகளில் சாலை எல்லை வரை மரக்கன்றுகள் தள்ளி நடப்படவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதேபோல் மாவட்டத்தில் மரங்களை அகற்றும் பொழுது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தவறாமல் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என பசுமை குழுவிற்கு உத்தரவிட்டார். இதில் டி.ஆர்.ஓ., ஜீவா, மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி உட்பட வனத்துறை, வருவாய் துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.