அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்கள் கூடுதல் போலீஸ் இன்றி திணறல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது. வேலை வாங்கித்தருவதாக ஆன்லைன் மோசடி, கவர்ச்சிகரமான விளம்பரங்கள், தள்ளுபடி வாயிலாக மோசடி, வங்கி பணம் திருட்டு, முகநுால் வாயிலாக பழகி பணம் மோசடி, அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களை மிரட்டி பணம் பறிப்பு, திருமண தகவல் மையம் மூலம் பணம் மோசடி, லோன் வழங்குதல் மூலம் மோசடி போன்ற பல்வேறு வகைளில் சைபர் குற்றங்கள் நடந்து வருகிறது.பணத்தை இழக்கும் பெரும்பாலோனார் அவமானம் மற்றும் தர்மசங்கடமான நிலையை தவிர்ப்பதற்காக, பலர் புகார் தருவதே இல்லை. குறிப்பாக, சிறிய அளவில் பணத்தை பறிகொடுப்போர், புகார் அளிப்பதில்லை. லட்சங்களில் இழப்புகளை சந்திப்போர் மட்டுமே புகார் தருகின்றனர். சைபர் குற்றங்களில் ஈடுபடுவோரை அடையாளம் காணுவது போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. வெளிமாநிலத்திற்கு சென்று பல்வேறு இடங்களில் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவ்வழக்கினை விசாரிக்கும் காவல் நிலையத்தில் குறைந்த அளவிலான போலீசாரே உள்ளனர்.கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப் இன்ஸ்பெக்டர், இரண்டு போலீசார் என மொத்தம் 4 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய முடியாமல் போகிறது.எனவே சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கூடுதல் போலீசார் நியமிக்க காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.