34 வழித்தடங்களில் புதிய மினி பஸ் செயல்முறை ஆணை வழங்கல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 34 வழித்தடங்களில் புதிய மினி பஸ்கள் இயக்குவதற்கும், ஏற்கனவே உள்ள 47 வழித்தடங்களை இடம்பெயர்வு செய்த ஆணையை தனியார் மினி பஸ்உரிமையாளர்களிடம், கலெக்டர் வழங்கினார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்குவதற்கு, மினி பஸ் உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு குலுக்கல் முறையில் 58 புதிய வழித்தடங்களுக்கு ஆணை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில், 24 புதிய வழித்தடங்களுக்கான செயல் முறை ஆணைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.மேலும் மீதமுள்ள 34 வழித்தடங்களுக்கான செயல் முறை ஆணைகள் மற்றும் ஏற்கனவே உள்ள 47 வழித்தடங்களுக்கு பழைய செயல் முறைகளில் இருந்து புதிய இடம் பெயர்வு செயல்முறை ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த், அதற்கான ஆணைகளை தனியார் மினி பஸ் உரிமையாளர்களிடம் வழங்கினார். அதில், வரும் ஏப் 30ம் தேதிக்குள் அனைத்து வழித்தடங்களிலும் மினி பஸ்களை இயக்க வேண்டும். அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி அரசு குறிப்பிட்ட கட்டணத்தின்படி குறித்த நேரத்தில் முறையாக இயக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., ஜெயபாஸ்கரன், நெடுஞ்செழியபாண்டியன், மினி பஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.