மகளிருக்கு உரிமை தொகை தேர்வானோருக்கு ஆணை வழங்கல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 2ம் கட்ட பயனாளிகளுக்கு தேர்வானதிற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாத குடும்ப தலைவிகளிடமிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மனுக்கள் பெறப்பட்டு, பரிசீலினை செய்யப்பட்டது. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 2ம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக தேர்வான 34,000 குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான வங்கி பற்று அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிகண்ணன் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் பயனாளிகளுடன் கலெக்டர் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் சப்கலெக்டர் ஆனந்த் குமார் சிங், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுமதி, கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., முருகன், ஒன்றிய சேர்மன்கள் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், சத்தியமூர்த்தி, தாமோதரன் மற்றும் தாசில்தார்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.