கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பில் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ரமேஷ், பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்தகிருஷ்ணன், இடைநிலை மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்ற மாநில அமைப்பு செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினர். பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் செல்வராஜ், அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் மகாலிங்கம், அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ் போராட்டம் குறித்து விளக்க உரையாற்றினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், இடைநிலை, முதுநிலை, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல், ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள அரசாணையை ரத்து செய்தல், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு கால முறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள், எம்.ஆர்.பி., செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் மற்றும் ஊர்ப்புற நுாலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், காலி பணியிடங்களை நிரப்புதல் உட்பட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவி, பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் விஸ்வலிங்கம், நெடுஞ்சாலைத்துறை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சாமிதுரை, நில அளவை அலுவலர் ஒன்றிப்பின் மாநில துணை தலைவர் செந்தில்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் 1,391 ஆசிரியர்கள், 252 வருவாய்த்துறை அலுவலர்கள், 163 ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டதால் பல்வேறு அரசு பணிகள் முடங்கின.