பஸ்சில் 3 பெண்களிடம் நகை திருட்டு; கள்ளக்குறிச்சியில் பரபரப்பு
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோடு பகுதியை சேர்ந்தவர் அப்துல்சர்தார் மனைவி ஷாபிரா,58; இவர் நேற்று முன்தினம் தியாகதுருகத்தில் உள்ள வங்கியில் தனது நகையை அடகு வைத்து, ரூ.1 லட்சம் பணத்துடன், கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து பஸ்சில் வீட்டிற்கு புறப்பட்டார். கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் இறங்கி பார்த்தபோது பையில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஒரே பஸ்சில் 2 திருட்டு கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலத்தை சேர்ந்த சிவா மனைவி அபிராமி, 29; இவர், நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில், ரூ.1.30 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, நகை வாங்குவதற்காக அரசு பஸ்சில் கள்ளக்குறிச்சி வந்தார். சேலம் சாலையில் உள்ள நகைக்கடைக்கு சென்ற அபிராமி, பையை திறந்து பார்த்த போது பணத்தை காணவில்லை. மற்றொரு சம்பவம் சங்கராபுரம் அடுத்த அழகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோயராஜ் மனைவி பவுலின், 42; இவர், தனது நகைகளை அடகு வைக்கவும், உறவினர் திருமணத்திற்காக புதிய நகை வாங்கவும் நேற்று முன்தினம் மாலை கள்ளக்குறிச்சிக்கு சென்றார். நகைக்கடையில் புதிதாக 2 கிராம் தங்க காசு வாங்கினார். தனது பழைய நகையை அடகு வைக்க தனியார் கடைக்கு சென்றார். நேரமாகிவிட்டதால் நகை அடகு வைக்க முடியாது, நாளை வருமாறு தெரிவித்தனர். இதையடுத்து பவுலின் புதிய நகையை தனியாகவும், அடகு வைக்க எடுத்து வந்த 38 கிராம் தங்க நகை, ரூ.10 ஆயிரம் பணம், ஏ.டி.எம்., கார்டு ஆகியவற்றை தனியாக ஒரு பையில் வைத்தார். மாலை 5.40 மணிக்கு, கள்ளக்குறிச்சியில் இருந்து கள்ளிப்பட்டுக்கு சென்ற அரசு டவுன் பஸ்சில் பவுலின் சென்றார். அழகாபுரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி பையை பார்த்தபோது, அடகு வைக்க எடுத்து சென்ற நகை மற்றும் பணம் இருந்த பை மாயமாகி இருந்தது. அரசு பஸ் மூரார்பாளை யத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு வந்த ஒரே பஸ்சில், அபிராமியின் பணமும், அதே பஸ் கள்ளக்குறிச்சியில் இருந்து கள்ளிப்பட்டிற்கு சென்ற போது பவுலினின் நகைகள் திருடுபோனது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மூவரும் தனித்தனியாக கள்ளக்குறிச்சி போலீசில் அளித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் பஸ்சில் பயணித்த 3 பெண்களிடமிருந்து நகை, பணம் திருடுபோன சம்பவம் பஸ் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி., கேமிராக்களை ஆய்வு செய்து, பஸ் டிரைவர், கண்டக்டர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.