கிர்ணி பழ சாகுபடியில் கச்சிராயபாளையம் விவசாயிகள்...ஆர்வம்; இடைத்தரகர்கள் தலையீடு இல்லாததால் உற்சாகம்
கச்சிராயபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயமும் அதனை சார்ந்த தொழில்களுமே மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இங்கு நெல், கரும்பு, மரவள்ளி, மஞ்சள், மக்காச்சோளம், வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான பயிர்களின் கொள்முதல் விலை மிகவும் குறைவாகவே உள்ளது. இடைத் தரகர்களே அதிக லாபம் ஈட்டி வருவதால், விவசாயிகளுக்கு போதிய வருமாணம் இல்லை. இதனால் விவசாயிகள் மாற்று பயிராக பப்பாளி, கொய்யா, கிர்ணி, தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்டவைகளை சாகுபடியில் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.குறிப்பாக கோடை காலத்திற்கு ஏற்ற கிர்ணி பழ சாகுபடியில், இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலானோர் தீவிரம் காட்டி வருகின்றனர். வரவேற்பு
'குக்குமிஸ் மெலோ' என அழைக்கப்படும், கிர்ணி பழம் இனிப்பு சுவையும் நறுமணமும் கொண்டது. இதில் வைட்டமின்கள் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. சீனா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, கிர்ணி உற்பத்தியில் இந்தியா, 3 வது இடத்தில் உள்ளது.நம் நாட்டில் பஞ்சாப், தமிழகம், உத்தரபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பழங்கள் ஜூஸ், ஜாம், ஜெல்லி ஆகியவை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. முதிர்ச்சி அடையாத காய்கள் ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுவதால், இதற்கு வியாபாரிகளிடையே அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. போதிய வருமானம்
இதில் அர்கா ராஜ்கான்ஸ், அர்கா ஜீட், பூசா சர்பதி, பூசா மதுரகஸ், பஞ்சாப் சன் போன்று பல்வேறு ரகங்கள் உள்ளன. இந்த பகுதியில் ஏக்கர் ஒன்றுக்கு, 15 முதல் 20 டன் வரை மகசூல் கிடைக்கிறது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் விதை நடவு செய்தால், 60 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடுகின்றன. கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், கிர்ணி பழத்திற்கு மவுசு அதிகரித்து வருகிறது. இதனால் வியாபாரிகள் நேரடியாக விவசாய நிலத்திற்கே வந்து பழங்களை வாங்கி செல்கின்றனர்.இந்த சாகுபடிக்கு குறைந்த அளவு தண்ணீரே போதுமானது. மேலும் முறையான சொட்டு நீர் மற்றும் சுழல் நீர் பாசனத்திற்கு ஏற்ற பயிராக கிர்ணி உள்ளதால், விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ' வயல்களில் களையை கட்டுப்படுத்துவது மிகவும் எளிது. சாகுபடிக்கு, 2 முறை குறைந்த அளவு உரம் அளித்தால் போதுமானது. அதனால் பயிர் பாதுகாப்பு செலவும் மிகவும் குறைவு. இந்த பழங்களை கிலோ, 10 ரூபாய் வரை விலை கொடுத்து வியாபாரிகள் வயல்களுக்கு நேரில் வந்து பெற்று செல்கின்றனர். இதனால் விற்பனையும் மிக மிக எளிதாகவே இருக்கிறது. மொத்தம் 60 முதல் 70 நாட்களில் குறைந்த செலவில் நிறைந்த வருமானத்தை தருவதால், கிர்ணி சாகுபடி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது,' என்றனர்.