கள்ளச்சாராய சம்பவம் குறித்து விசாரணை கள்ளக்குறிச்சி கலெக்டர், எஸ்.பி.,க்கு சம்மன்
கள்ளக்குறிச்சி : கள்ளச்சாராயம் பாதிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தற்போதைய கலெக்டர், எஸ்.பி., கலால் டி.எஸ்.பி., மற்றும் கலால் உதவி ஆணையருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் 19ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்த 229 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதில் 68 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.ஒரு நபர் ஆணைய தலைவர் கோகுல்தாஸ், சாராயம் குடித்து பாதிப்படைந்தவர்கள், இறந்தவர்களின் குடும்பத்தினர், அரசு அலுவலர்கள் மற்றும் சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 24 நபர்களிடம் தனி, தனியாக விசாரணை மேற்கொண்டார்.இச்சம்பவம் தொடர்பாக 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் 9 நபர்கள் கள்ளக்குறிச்சியில் உள்ள விசாரணை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனையை வாக்குமூலமாக அளித்தனர்.இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க தற்போதைய கலெக்டர் பிரசாந்த், எஸ்.பி., ரஜத்சதுர்வேதி, கலால் டி.எஸ்.பி., அறிவழகன், கலால் உதவி ஆணையர் குப்புசாமி ஆகிய 4 பேரும் வரும் 28ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.அதேபோல், முன்னாள் கலெக்டர் ஷ்ரவன்குமார், எஸ்.பி., சமய்சிங்மீனா மற்றும் உயர் அலுவலர்களை செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.