கனியாமூர் மாணவி இறந்த வழக்கு ஸ்டேஷன் ஜி.டி., எப்.ஐ.ஆர்., சமர்ப்பிப்பு விசாரணை டிச.,11ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கள்ளக்குறிச்சி : கனியாமூர் பள்ளி மாணவி இறந்த வழக்கில், போலீஸ் ஸ்டேஷன் பொது நாட்குறிப்பு, எப்.ஐ.ஆர்., ஆகியவற்றை சி.பி.சி.ஐ.டி., போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி பள்ளியில் விடுதியில் தங்கி பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கினை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி., போலீசார், கடந்த 2023ம் ஆண்டு மே 15ம் தேதி 1,360 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். ஆசிரியைகள் கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோர் வழக்கிலிருந்து நீக்கப்பட்டனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதல் தகவல் அறிக்கை, சின்னசேலம் போலீஸ் ஸ்டேஷன் பொது நாட்குறிப்பு வழங்கக் கோரியும் சிறுமியின் தாய் செல்வி வழக்கு தொடர்ந்தார்.இவ்வழக்கின் விசாரணை கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் தேவச்சந்திரன் ஆஜரானார். சி.பி.சி.ஐ.டி., போலீசார் முதல் தகவல் அறிக்கை, போலீஸ் ஸ்டேஷன் பொது நாட்குறிப்பு ஆகியவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.நீதிபதி ஸ்ரீராம், முதல் தகவல் அறிக்கை மற்றும் போலீஸ் ஸ்டேஷன் பொது நாட்குறிப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அடுத்த விசாரணையில் தெரிவிக்கலாம் என கூறி, விசாரணையை டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.