உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரிஷிவந்தியம் பெரிய ஏரி மதகுகளை சீரமைப்பதில் அலட்சியம்: அதிகாரிகள் மீது விவசாயிகள், பொதுமக்கள் அதிருப்தி

ரிஷிவந்தியம் பெரிய ஏரி மதகுகளை சீரமைப்பதில் அலட்சியம்: அதிகாரிகள் மீது விவசாயிகள், பொதுமக்கள் அதிருப்தி

ரிஷிவந்தியத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 175 ஏக்கர் பரப்பளவிலான பெரிய ஏரி உள்ளது. பருவமழைக் காலங்களில் வனப்பகுதியில் பெய்யும் மழை நீர் பெரிய ஏரிக்கு வரும் வகையில் நீர்வரத்து வாய்க்கால் உள்ளது.ஏரி நிரம்பி விவசாயத்திற்காக 3 பாசன மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கும் பட்சத்தில் ரிஷிவந்தியம், வெங்கலம் மற்றும் முட்டியம் கிராமங்களைச் சேர்ந்த 1,500 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பயன்பெறும்.மேலும், பெரிய ஏரி நிரம்பி கோடி சென்றால், அருகில் உள்ள வெங்கலம், முனிவாழை, பிரிவிடையாம்பட்டு மற்றும் காட்டுஎடையார் ஏரிகளுக்கு தண்ணீர் சென்று, இறுதியாக தென்பெண்ணை ஆற்றில் கலக்கும். இந்த ஏரியில் தண்ணீர் சேமித்தால், நிலத்தடி நீர்மட்டம் உயருவதுடன், அருகில் உள்ள கிராமங்களில் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் இருக்கும்.பல்வேறு கிராமங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ள ரிஷிவந்தியம் பெரிய ஏரி முறையான பராமரிப்பில்லாமல் உள்ளது. ஏரிக்கு தண்ணீர் வரும் வகையில் உள்ள வாய்க்கால் புதர்மண்டி கிடப்பதால், மழைநீர் ஏரிக்கு செல்லாமல் வாய்க்காலில் தேங்கி குட்டையாக நிற்கிறது.அதேபோல், ஏரியில் உள்ள 3 பாசன மதகுகளும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது. ஏரியின் ஆழப்பகுதியில் உள்ள 2வது மதகு வழியாக அதிகளவு தண்ணீர் கசிந்து வெளியேறுவதால், நீண்ட நாட்களுக்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. பழுதடைந்த மதகுகளை சரிசெய்யக்கோரி விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால் பெரிய ஏரி நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, தண்ணீர் கசிவு ஏற்படாமல் இருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் 2வது மதகில் மண்ணை கொட்டி மூடியுள்ளனர். பழுதடைந்த மதகுகளை சீரமைக்க நிரந்தர தீர்வு காணாமல், தற்காலிகமாக மண்ணை கொட்டி மூடுவதால், பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முடியாத சூழல் உள்ளது. மேலும், ஏரி கோடி செல்லும் வாய்க்கால்களும் துார்ந்து போன நிலையில் இருப்பதால், உபரி தண்ணீர் ரிஷிவந்தியம் ஊருக்குள் செல்ல வாய்ப்புள்ளது.எனவே, வடகிழக்கு பருவ மழை தீவிரமடையும் முன்பே, பெரிய ஏரியின் கரைகளை பலப்படுத்திட வேண்டும், ஏரிக்கு நீர்வரத்து ஏற்படும் வகையில் உள்ள வாய்க்கால்களை துார்வாரி, பழுதடைந்த மதகுகளை சீரமைக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை