வாகனங்கள் நிறுத்துமிடம் : நோயாளிகள் கோரிக்கை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதியை ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் அரசு மாவட்ட மருத்துவக்கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பைக், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படாமல் உள்ளதால், நோயாளிகள், பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் வாகனங்கள் திறந்த வெளியில் நிறுத்தி வைக்கின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'இங்கு மழை மற்றும் கடுமையான வெயில் காலங்களில், வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் வாரந்தோறும் நடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமிற்கு வருபவர்கள் பாதிப்படைகின்றனர். அதனால், இங்கு மேற்கூரையுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.