கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் ஆக்கிரமிப்புகளால் மக்கள் அவதி
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் நிரம்பி வழியும் தள்ளுவண்டிகளின் ஆக்கிரமிப்புகளால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மையப்பகுதியாக மந்தைவெளி உள்ளது. இப்பகுதி வழியாக சிவன், பெருமாள், கன்னிகாபரமேஸ்வரி கோவில்கள், திருமண மண்டபம், மருத்துவமனைகள், முஸ்லிம் தர்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியும். நகரப்பகுதி மக்கள் வணிக நிறுவனங்கள், அலுவலகங்கங்களுக்கும் இவ்வழியாக சென்று வருகின்றனர். இதனால் மந்தைவெளி பகுதியில் வாகன போக்கு வரத்து அதிகமாக இருக்கும். போக்குவரத்து முக்கியத்துவம் வாயந்த மந்தைவெளி பகுதி தற்போது தள்ளுவண்டி கடைகள், தற்காலிக வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளால் நிரம்பி வழிகின்றது. அடிக்கடி அரசியல் கட்சி கூட்டம் மற்றும் சங்க அமைப்புகளின் ஊர்வலங்களும் நடப்பதால், போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகரிக்க செய்கிறது. ஆக்கிரமிப்பு அதிகரிப்பதால், அவசர காலங்களில் மருத்துவமனைக்கு செல்லக்கூட வழியின்றி மக்கள் விழி பிதுங்கி நின்றனர். முகூர்த்த நாட்களில் நடந்து செல்லவே முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மந்தைவெளி ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களின் போக்குவரத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.