உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்: திருக்கோவிலுார் காவல் உட்கோட்டத்தை பிரிக்க கோரிக்கை

சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்: திருக்கோவிலுார் காவல் உட்கோட்டத்தை பிரிக்க கோரிக்கை

திருக்கோவிலுார் நகராட்சி வேகமாக விரிவடைந்து வருகிறது. மக்கள் தொகை எண்ணிக்கையும் பன்மடங்காக பெருகிக்கொண்டே செல்கிறது.விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்படும் போது, கொடியூர், குன்னத்தூர், எல்ராம்பட்டு, வடமருதுார் உள்ளிட்ட, 8 கிராமங்கள் திருவெண்ணைநல்லுாரில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் போலீஸ் நிலையத்தில், சேர்க்கப்பட்டன. இந்நிலையில், ரிஷிவந்தியம் மற்றும் திருக்கோவிலுார் போலீஸ் எல்லைகள் மாறி மாறி வருகின்றன. நரிப்பாளையம், பெருங்குறிக்கை, வடுகபாளையம் என, 25 கிலோமீட்டர் துாரத்திற்கு திருக்கோவிலுார் எல்லை நீள்கிறது.

புதிய போலீஸ் நிலையம் தேவை

இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்றால் கூட, போலீசார் அவ்வளவு சீக்கிரத்தில் அந்த கிராமங்களுக்கு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. ஏனென்றால் திருக்கோவிலுர் போலீஸ் நிலையம் மொத்தம் 71 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.இதனால் மண் கடத்தல், கனிமவள கொள்ளை, கள்ளச்சாராயம், 24 மணி நேர மதுபான விற்பனை ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். சமீபகாலமாக திருக்கோவிலுாரில் பைக் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சிக்கல்களை சரி செய்ய, ஜி.அரியூரில் புதிதாக ஒரு போலீஸ் நிலையத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, திருக்கோவிலுார் காவல் உட்கோட்டத்தில், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, மகளிர் மற்றும் மதுவிலக்கு ஆகிய போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதனை தவிர்த்து மணலூர்பேட்டை, திருப்பாலபந்தல், ரிஷிவந்தியம், பகண்டை கூட்டு சாலை, சங்கராபுரம், வடபொன்பரப்பி, மூங்கில்துறைப்பட்டு போலீஸ் நிலையங்களையும் திருக்கோவிலுார் டி.எஸ்.பி., கண்காணிக்க வேண்டிய நிலை உள்ளது.

பணிச்சுமை அதிகரிப்பு

மேலும், அதிகரித்துவிட்ட மக்கள் தொகை, நகர மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிச்சுமை அதிகரித்துவிட்ட நிலையில் திருக்கோவிலுாரில் இருந்து கல்வராயன்மலையை வரை போலீசார் செல்ல வேண்டியுள்ளது. அதனால் சங்கராபுரத்தை மையமாகக் கொண்டு வடபொன்பரப்பி, மூங்கில்துறைப்பட்டு, பகண்டை கூட்டு சாலை போலீஸ் நிலையங்களை உள்ளடக்கி மேலும் ஒரு உட்கோட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சிறப்பாக கையாளவும், கள்ளச்சாராயம், திருட்டு, கனிமவள கொள்ளை சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும், திருக்கோவிலுாரில் புதிய போலீஸ் நிலையத்தை உருவாக்குவதும், புதிய உட்கோட்டத்தை ஏற்படுத்துவதும் கட்டாயமாகியுள்ளது. இது குறித்து பரிசீலித்து அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி